Thursday 30 January 2014

இர
இற..

பெறு..

கேள்
அல்லது
எடுத்துக் கொள்.

வாழ்
வீழ்..

கையிலேந்தி
நீட்டும்
ஏதும்
புனிதமல்ல

உடல்
பசி..

அழு
எரி..

வா
போ

மறுபடி வாழ்

அல்லது
செத்துப போ..
இல்லை என்று சொல்கிறேன்..

இருந்தால் என்ன செய்வாய்
என்கிறாய் நீ..

எனக்கென்ன வேண்டும்..
கிடைக்க வேண்டியது கிடைத்தபடிதான்
இருக்கிறது..

முடிந்தால் உன் கடவுள்
நான்
சனிக்கிழமை இரவுகளில்
செய்த போன்கால்களை
மறுநாள் எனக்கு 
நினைவில்லாத மாதிரி
எல்லாருக்கும் நினைவில்
இல்லாமல் செய்யட்டும்..

அல்லது

அக்குழந்தைகளின் 
பருத்த வயிற்றில்
பசி எனும் கொடுநோய்
இல்லாமல்
சொஸ்தப் படுத்தட்டும்..

சொற்களை
பலம் கொண்டவையாக 
மாற்றட்டும்..

இழந்து போனவற்றை
இழந்த சுவடின்றி
திருபபித் தரட்டும்..

அதிகம் வேண்டாம்..
நான் சிந்திய
ஆயிரம் கண்ணீர்த் துளிகளில்
ஒன்றையேனும்
மறுபடி என் கண்ணுக்குள்
புக வைக்கட்டும்..

உன் மற்றும்
உன் கடவுளின்
பெருமைமிகுந்த
பார்வையால்
என் போன்ற
எளியவர்களின் வாழ்வு
குறைந்தபட்சம்
துயரில்லாததாகட்டும்..

அளவிலா செல்வம்
துயரிலா வாழ்வு
என்று எதுவும்
கோராத எனக்கு
பசியிலா வயிற்றை
அருளினால் கூட போதும்..

எல்லா கடவுள்களின்
கன்னத்தைக் கிள்ளியெடுத்து
முத்தமிடுவது மட்டுமன்றி
அவர்களின் கால்களுக்கு 
நான் செய்த செருப்புகளை
அணிவிப்பேன்..

அவர்களின் வரங்களைப்
போலன்றி
என் செருப்புகள்
மிகவும் சௌகர்யமானவை..

Sunday 26 January 2014

நீங்கள்
நீல நிற மகிழுந்துக்கு
சொந்தக்காரராயிருக்கலாம்..

அதில் அடிபட்டு இறந்த
சிறுமிக்கு
நீல நிறம் பிடிக்காதோ என
நீங்கள் நினைக்கலாம்..

ஒரு வேளை பிடிக்காதெனினும்
அது 
அவள் குற்றமல்ல..

நீங்கள் உங்கள் கைகளை
சோப்பு போட்டு கழுவிவிட்டு
உங்கள் செல்ல நாய்க்கு
உணவு ஊட்டி விடலாம்..

எல்லா நாய்களுக்கும்
அந்த வாழ்வு 
லபிக்காது என்பதை நீங்கள்
அறியுங்கள்.
(மனிதர்களுக்கும்)

இறுக மூடப்பட்ட
உங்கள் 
குளிர்ப்பதனக் கார்களின் 
ஜன்னலுக்கு வெளியே
துரத்திவரும் நாய்கள்
வெறி கொண்டவையாக இல்லாமல்
பசி கொண்டவையாகக் கூட 
இருக்கலாம்..

கவனமாக வளர்க்கும்
உங்கள் குழந்தைகளை
ஒரு போதும்
அந்த 
இல்லாதவர்களின் தேசத்துக்குப்
போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..

உங்கள்
நாய்களும், குழந்தைகளும்
உங்களுக்கு 
ரொம்ப ரொம்ப 
முக்கியம்..
நான் ஏன்
அழுதுகொண்டிருக்கிறேன்..

வழக்கம் போல்தான்
குழந்தைகளைக் 
கொன்று கொண்டிருக்கிறார்கள்
அவர்கள்..

அக்கிரமங்கள் செய்தவர்கள்
வழமை போலதான்
நீதி கேட்டு
சிலம்புகளோடும்
பெருங்கூட்டத்தோடும்
நீதி மன்றங்களுக்கு வருகிறார்கள்..

காற்றில் பறந்து வந்தவொரு சொல்
என் கண்களைக் குத்தியிருக்கக் கூடும்..

நீங்கள் அறியாது
என் வயிற்றினுள்
பசியெனும் நோய்
பரவியிருக்கக் கூடும்..

என்னை அடித்த செருப்பு
எனது
கனவில் வந்திருக்கக் கூடும்..

சுருண்டு ஒரு மூலையில்
படுத்திருக்கும் என்னிடம்
ஒரே ஒரு முத்தம் மட்டும்
மிச்சமிருக்கக் கூடும்..

அம்மா அம்மாவென 
அரற்றிய சிறுமியொருத்திக்கு..
.................
.................

என்ன வேண்டுமானால்
இருக்கட்டுமே..

எந்த மதிப்பும் இல்லாத ஒருவன்
சாலையோரத்திலோ
மதுச் சாலையிலோ
அழுதபடி இருக்கட்டுமே..

நாசமாய்ப் போகிற
ஒரு கண்ணீர்த் துளியைப் பற்றி
யாருக்கு என்ன கவலை..>

நான் ஏன் 
அழுதுகொண்டிருக்கிறேன் என்பதை
உங்களிடம் சொல்லவேண்டிய
அவசியமே
எனக்கு இல்லை..

புத்தம் சரணம் கச்சாமி..

(மரியாதையாக ஓடிப் போய்விடுங்கள்..)
காற்று புகுந்தும்
அசையாததொரு
திரைச்சீலை என்னிடம் இருக்கிறது..

திருகியதும் தண்ணீர் தரும்
குமிழ்களை 
நான் வாங்க முடியும்,
விற்க முடியாது..

முகத்தில் தெறிக்கும்
சிவப்பு வண்ணத்தை
நீங்கள் பார்க்க 
விரும்ப மாட்டீர்கள்
- சிவப்பு வண்ணம்
பெயிண்ட் அல்ல

தலைகோதும் விரல்களுக்கு
கொலை செய்யத் தெரிவது
யாருடைய பிழையும் அல்ல..

அரற்றியபடி 
முத்தத்தினால் உயிரை உறிஞ்சும்
பாடல்கள் எல்லோரிடமும்
உள்ளன..

பிஞ்சு மாங்காய்களை
மலராத மலர்களை
இன்னும் முதுகு நிமிராத தாவரங்களை
உங்களால்
வெட்டி உணவு சமைக்க முடியும்..

அய்யோ என்பது 
பாடல் என்றும் நீங்கள் சொல்வீர்கள்..

ஒரே கவிதையை
மறுபடி மறுபடி
நான் எழுதியபடி இருப்பேன்..

இதோ என்னை உகுக்கிறேன்..
பசித்தவர்கள் அனைவரும்
என்னைத் தின்று
பசியாறுவீர்களாக..

தன் மாமிசத்தை 
உணவாகக் கொடுத்தவன்
கற்பிதம் அல்ல...

ஆண்டாண்டு காலமாக..
நூற்றாண்டு காலமாக
அவன்
அவர்கள்
நாம்
எல்லோரும்
அவனை உண்டபடிதான் வாழ்ந்திருக்கிறோம்..

இந்த நாளின் உணவை
எனக்கு அருளியதற்காக
யாரின் பெயராலும்
நான்
நன்றி சொல்லப் போவதில்லை..

தேவனாகிய சக மனிதனே
உண்மையின் பெயரால்
உன் வயிறு
பசியினைக் கொல்வதாக 
இருக்கட்டும்..

யாரேனும் உனக்கு இரு
பட்டாணிக் கடலைகளை அளிப்பார்கள்
காத்திரு..
எப்படியிருக்கும் ஒளி..

நீ
அண்ணாந்து பார்க்கும்போது
தென்படும்
செவ்வக செவ்வக
சன்னல் வெளிச்சங்கள் போல..

விரித்த
ஆள்காட்டி மற்றும் நடு
விரல்களுக்கிடைப்பட்ட கோணத்தைப் போல

விதிர்த்து சாபமிடும்
ஒரு 
பாலியல் தொழிலாளியின்
இரவைப் போல..

ஒரு கோடி ரூபாய் 
பணத்தைப் போல..

ஒரு வெற்றியைப் போல..

வெற்றிக்குப் பின் வரும்
ஆசுவாசத்தைப் போல..

எப்படியிருந்தாலும்
இன்றுவரை
உனக்குத் தெரியவில்லை
வெளிச்சம் 
எப்படியிருக்குமென்று..

முட்கள் குத்தும்
பாதையில் நீ
குதித்துக் குதித்துப் 
போகும்போது
எப்போதேனும் அது
தென்படக்கூடும்..

அப்போது

நீ 
முள்ளைப் பார்ப்பாயா
ஒளியைப் பார்ப்பாயா..?